Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மொத்த சொத்தை விற்றாவது கடனை கட்டுவோம்: Coffee Day

ஆகஸ்டு 18, 2019 07:43

பெங்களுரு : முன்னாள் தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

அந்த நேரத்தில், சித்தார்த்தாவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக காஃபி டே நிறுவனருக்கு அதிகப்படியான கடன் அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும், அதனால் தான் சித்தார்த்தா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் காஃபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்காக 9 ஏக்கர் அளவுள்ள தொழில் நுட்ப பூங்காவை விற்க போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த Coffee Day Enterprises Ltd நிறுவனம், காபி டே குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும். இந்த நிலையில் இந்த நிறுவனம் சொத்தை விற்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பலவாறாக செய்திகள் வெளியாகின.   

இதற்கெல்லாம் தற்போது பதில் கொடுக்கும் விதமாக காஃபி டே (Cafe Coffee Day) நிறுவனம் ஒர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காபி டே நிறுவனம் தற்போது தான் கடன் பிரச்சனையிலிருந்து மீளத் தொடங்கியிருப்பதாகவும், அதோடு காஃபி டே நிறுவனத்தின் மொத்த கடன் இவ்வளவு தான் என்றும் பங்கு சந்தை அமைப்பிடம் தகவல் கொடுத்துள்ளது. அதன் படி காஃபி டே நிறுவனத்துக்கு மொத்தம் 4,970 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், இந்தக் கடனில் 4,796 கோடி ரூபாய் பாதுகாப்பான பிணையக் கடன் பெற்றிருப்பதாகவும், 174 கோடி ரூபாய் பிணையம் இல்லாமல் வாங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். 

மேலும் தங்களது 9 ஏக்கர் அளவுள்ள குளோபல் வில்லேஜ் சொத்தை விற்று குறிப்பிட்ட கடனை அடைக்க இருப்பதாகவும், இதன் படி சொத்தை விற்று கடனை செலுத்துவதன் வாயிலாக, இந்த நிறுவனத்தின் கடன் 2,400 கோடி ரூபாயாக குறையும் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். இது மட்டும் அல்ல மீதமிருக்கும் இந்தக் கடனும் விரைவில் அடைக்கப்படும் என்றும், காஃபி டே குழுமம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு சொந்தமான, இந்த 9 ஏக்கர் நிலத்தை, தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம், Tanglin Developments Ltd நிறுவனத்திற்கு சொந்தமான (காஃபி டே குழுமம்) குளோபல் வில்லேஜ் பூங்காவை வாங்குவதாகவும் கூறப்பட்ட நிலையில், Global Village Tech Park க்கில் உள்ள இடத்திற்கு 2,600கோடி ரூபாய் முதல் 3,000 கோடி ரூபாய் வரை மதிப்பிட்டுள்ளதாம் பிளாக்ஸ்டோன் குழுமம். இதனால் காஃபி டே நிறுவனத்தின் கடன் 2,400 கோடி ரூபாயாக குறையும் என்றும் கூறப்படுகிறது.   

மேலும் காஃபி டே நிறுவனத்தையும், சில்லறை வர்த்தகத்தையும் கையாளும் நிறுவனமான, காஃபி டே குளோபல் நிறுவனத்திற்கும் மொத்தம் 1,097 கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 1009 கோடி ரூபாய் கடன் பிணையத்துடன் பாதுகாப்பாகவும், மீதமிருக்கும் 88 கோடி ரூபாய் பாதுகாப்பற்ற கடனாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் அல்லாது, லாஜிஸ்டிக்ஸ் துறையிலும் குறிப்பிடத்தக்க கடன்களுடன் இருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக Sical Logistics நிறுவனத்திற்கு 1,488 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்