Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டீ, காபி விலை உயருமா?

ஆகஸ்டு 19, 2019 04:11

சென்னை: தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கடைகளில் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும் விற்பனை விலையை லிட்டருக்கு ஆறு ரூபாயும் உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையை விலையை அடுத்தடுத்து உயர்த்த உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என டீ கடைக்காரர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. சென்னையில் நேற்று டீ கடைக்காரர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தன் கூறியதாவது: தற்போது பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் பல டீ கடைகள் பெரிய அளவில் லாபம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த நேரத்தில் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது வியாபாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் டீ, காபி விலையையும் உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் ஏற்கனவே விற்பனை மந்தமாகி விட்ட நிலையில் விலையை உயர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகுமோ என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது.

எனவே தற்போதைய சூழலில் டீ, காபி பழைய விலையில் விற்பது சமாளிக்க முடியாது. ஆகையால் டீ காபி விலையை உயர்த்தலாம் என்றும் முடிவு செய்துள்ளோம். உயர்த்தும் சூழல் வந்தால் டீ, காபி விலை இரண்டு ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்