Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவி குத்தி கொலை: தற்கொலை செய்த போலீஸ்காரர் பற்றி புதிய தகவல்

ஆகஸ்டு 19, 2019 10:31

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு தருண் (வயது 7) என்ற மகன் உள்ளான். நரேசும் ஜெயஸ்ரீயும் பெரம்பூர் செம்பியத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். நரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அதை ஜெயஸ்ரீ கண்டித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெயஸ்ரீ கோபித்துக் கொண்டு புத்தகரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் ஜெயஸ்ரீ தனது தாய் ஜமுனா, மகன் தருண் ஆகியோருடன் வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள தாய்மாமன் சரவணன் வீட்டுக்கு சென்றார். மனைவி, மகனுடன் சர்மா நகரில் உள்ள சரவணன் வீட்டுக்கு சென்று இருப்பதை அறிந்த நரேஷ் அங்கு சென்றார். மனைவியிடம் இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று சமாதானம் செய்தார். இதனால் ஜெயஸ்ரீ சமாதானம் அடைந்தார்.

பின்னர் ஜெயஸ்ரீ, தருண் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு புத்தகரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.அப்போது இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நரேஷ் கத்தியால் ஜெயஸ்ரீயை சரமாரியாக குத்தினார். கழுத்து, முதுகு, தாடை உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நரேஷ் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே உறவினர் சரவணன் ஜெயஸ்ரீ, நரேஷ் ஆகியோரின் செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து புத்தகரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சரவணன் பார்த்தார். அங்கு ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்திலும், நரேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு சிறுவன் தருண் தூங்கிக் கொண்டு இருந்தான். இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்