Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்ஆர்எம் தற்கொலைகள்: எஸ்பி மல்லிகா தலைமையில் விசாரணை

ஆகஸ்டு 20, 2019 11:01

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலையில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயக கட்சி தலைவர், எம்பி பாரிவேந்தர்தான் இதன் சொந்தக்காரர். இங்கு மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதை தவிர மிகப்பெரிய ஆஸ்பத்திரியும் இந்த வளாகத்துக்கு உள்ளேயே செயல்பட்டு வருகிறது.

இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இதில் நிறைய பேர் வசதியான வீட்டு பிள்ளைகள்தான். இதனால் இவர்கள் தங்குவதற்காக ஹாஸ்டலும் எஸ்ஆர்எம்முக்கு உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே மட்டும் இல்லாமல் அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது. 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற 21 வயது பொறியியல் படிக்கும் மாணவி, கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மறுநாளே, ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த அனித் செளத்திரி என்ற 19 வயது மாணவர், ஹாஸ்டல் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரே மாசம் இடைவெளியில் அதாவது ஜூலை 15-ம் தேதி குமரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன் அதே 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த 3 மரணங்களும் முதலில் தற்கொலை என்றே கருதப்பட்டாலும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தந்தனர். இதன் அடிப்படையில்தான், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை கடந்த ஜூலை 17-ம் தேதி பிறப்பித்து உத்தரவிட்டதே டிஜிபி திரிபாதிதான்.

இந்த உத்தரவின் அடிப்படையிலேயே சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கு நேரடியாக சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இறந்து போன 3 மாணவர்கள் குறித்து நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக நிறைய தகவல்களையும் போலீசார் திரட்டி உள்ளதாக தெரிகிறது.

மாணவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது குறித்த உண்மைகள் இனி விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்