Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி:குழந்தைகளுடன் உயிர் தப்பிய சுமதி

ஆகஸ்டு 20, 2019 11:25

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் வரும் நேரத்தில் ஸ்கூட்டியில் தண்டவாளத்தை குழந்தைகளுடன் பெண் கடக்க முயன்ற போது, வாகனம் திடீரென பழுதானது. அப்போது ரயில் வேகமாக வந்தநிலையில் அந்த பெண் உடனே ஸ்கூட்டியை விட்டுவிட்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு கனநிமிடத்தில் தப்பினார். இதனால் வாகனம் மட்டும் ரயிலில் சிக்கி சிதறியது. 

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். ஆனால் கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில் ரயில் செல்வதற்காக கேட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகனங்கள் எல்லாம் வரிசையில் அணி வகுந்த நின்றுகொண்டிருந்தன. சுமதி மட்டுமே குழந்தைகளுளை பள்ளியில் விட வேண்டிய அவசரத்தில் ரயில்வே கேட்டை கடந்து தண்டவாளத்தில் சென்றார். 

அப்போது எதிர்பாராதவிதமாக வண்டி ஆப்பாகி தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றுகொண்டது. . அந்த நேரத்தில் சென்னை - நெல்லூர் விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அபாய குரல் எழுப்பினர். வாகனத்தை இயக்க முடியாது என்பதை உணர்ந்த சுமதி. உடனே சமயோசிதமாக செயல்பட்டு தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடந்து சிலநிமிடத்தில் தப்பினார். 

ஆனால் தண்டவாளத்தில் நின்ற வாகனம் விரைவு ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. வெகு தூரம் ரயிலால் இழுத்துச் செல்லபட்ட இருசக்கர வாகனத்தின் பாகங்களை எடுப்பதற்காக ரயில் நிறுத்தப்பட்டது. பின்ன இருசக்கர வாகன பாகங்களை அகற்றப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

ரயில் வரும் போது தண்டாவளத்தை கடந்து செல்லக்கூடாது என்பதற்காக தடுப்புகள் போடப்படும் நிலையில் அதை வாகன ஓட்டிகள் கடந்து செல்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை எத்தனை முறை ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. 

அதேநேரம் கொருக்குப்பேட்டை ரயில்வே கிராஸிங்கை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அலுவலக நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாகவே ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்க வேண்டிய சூழல் தங்களுக்க ஏற்படுவதாகவும் எனவே கொருக்குப்பேட்டை ரயில்வே கிராஸிங் சுரங்க பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்