Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உண்மைத்தன்மையை அறிந்த பிறகே ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டும்: ஆசிய ஊடகவியல் குழு விவாதத்தில் வலியுறுத்தல்

ஆகஸ்டு 21, 2019 05:49

சென்னை: தவறான தகவல்கள் வெளியாகாமல் இருப்பதிலும், செய்தியின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதிலும் பத்திரிகைகள், ஊடகங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆசிய ஊடகவியல் குழு விவாதத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆசிய ஊடகவியல் கல்லூரியும், அமெரிக்க துணைத் தூதரகமும் இணைந்து ‘தவறான தகவல் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் செய்திப்பிரிவின் தலைமைப் பொறுப்பு வகிப்பது’ என்பது தொடர்பான குழு விவாதம் சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

ஆசிய ஊடகவியல் கல்லூரி மற்றும் ஊடக வளர்ச்சி நிறுவனத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற குழு விவாதத்தில் அமெரிக்காவின் ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் செய்திகள் சங்கத்தின் செயல் இயக்குநர் டேன் செலி, ஏஎல்டி நியூஸ் இணை நிறுவனர் பிரதிக் சின்கா, அவுட்லுக் இதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், கிருஷ்ண பிரசாத் பேசும்போது, "தவறான தகவல்கள் வெளிவருவது முதலாம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது. செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் தங்களது சேனலை ஏராளமான பேர் பார்க்க வேண்டும் என்பதில்தான் அவசரம் காட்டு கின்றனர்.

செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே செய்தியைத் தரவேண்டியது பத்திரிகையாளரின் கடமை. அதே அளவுக்கு ஆசிரியருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக உரிமையாளர்களுக்கும் பொறுப்பு உள்ளது" என்றார்.

டேன் செலி பேசுகையில், “ஒரேயொரு பத்திரிகை அல்லது ஊடகத்தை மட்டும் படித்தோ அல்லது பார்த்தோ செய்தியை நம்பிவிடக்கூடாது. பல பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூல மாக செய்தியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், விழிப்புணர்வும் அவசியம். சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. அதனால்தான் சமூக வலைதளங்கள் பெரும் சவாலாக தற்போது உருவெடுத்துள்ளன. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

பிரதிக் சின்கா பேசும்போது, “பல ஊடக நிறுவனங்களை தங்கள் நலனுக்காக அரசுகள் பயன்படுத்தியுள்ளன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இருப்பினும், பல ஊடக நிறுவனங்கள் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே செய்திகள் வெளியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
 

தலைப்புச்செய்திகள்