Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: இந்திய எல்லைப்பகுதிகளுக்கு சீல் வைப்பு

ஆகஸ்டு 21, 2019 07:10

ஜெய்ப்பூர்:காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஏவி விட்டுள்ளது. அவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் குஜராத் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில், பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. அனுப்பிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் குஜராத் வழியாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் செல்ல முயற்சிப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.

இதையடுத்து குஜராத் போலீசார் ராஜஸ்தான் போலீசாரை உஷார்படுத்தினார்கள். பயங்கரவாதிகள் குஜராத்தில் பதுங்கி இருக்கலாம் என கருதி ஒரு பக்கம் குஜராத் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் ராஜஸ்தானுக்குள் நுழைந்து விடாமல் தடுக்க ராஜஸ்தான் போலீசாரும் தேடுகிறார்கள். குஜராத்தில் இருந்து ராஜஸ்தானில் உதய்பூர் அல்லது சிரோகி மாவட்டம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அந்த பகுதி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மாநிலத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. எல்லைப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், முக்கிய இடங்கள் ஆகியவற்றில் சோதனை நடக்கிறது.

ராஜஸ்தான் - குஜராத் எல்லையை 5 பகுதிகளாக பிரித்து இந்த தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள். ராஜஸ்தான் எல்லைப்பகுதி மாநிலங்களாக குஜராத், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. அந்த எல்லைப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனை நடத்துகிறார்கள்.

ராஜஸ்தான் மட்டும் அல்லாமல் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்