Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை

ஆகஸ்டு 21, 2019 02:49

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் கிராமம் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் மகன் சூர்யா(வயது22). அதே ஊரை சேர்ந்தவர் கருணாகரன். தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கருணாகரனின் வீட்டிற்கு திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த அவரது உறவுக்கார இளம்பெண் ஒருவர் அடிக்கடி வந்து செல்வாராம். 

அப்போது சூர்யாவிற்கும், அந்த பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்க வில்லையாம். இந்நிலையில் கடந்த 18-ந்தேதி சூர்யா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஒன்று திரண்டு நேற்று இரவு சூர்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்து சூர்யாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். மேலும் சூர்யாவின் உறவினர்கள் வீட்டையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சூர்யாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கருணாகரனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரது வீட்டை அடித்து நொறுக்கினர். மேலும் கருணாகரனை உருட்டுக்கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் அவரது மனைவி சத்தியாவை தாக்கியுள்ளனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த கருணாகரனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். இதுபற்றிய தகவலின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், அய்யம் பேட்டை இன்ஸ் பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ் பெக்டர் உமாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருணாகரனின் மனைவி சத்தியா அய்யம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சூர்யாவின் உறவினர்களான பெருமாக்கநல்லூரை சேர்ந்த அய்யப்பன்(24), கார்த்தி(28), தினேஷ்(25), குருமூர்த்தி(30), பிரகாஷ்(24), மணிகண்டன்(24), சரவணன் (39), சங்குப்பிள்ளை(50), பொன்னுசாமி(52), சின்னப்பா(42) மற்றும் துரைகுமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்