Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போராட்டத்தை கையில் எடுத்த சேலம் உருக்காலை தொழிலாளர்கள்

ஆகஸ்டு 22, 2019 10:45


சேலம்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சர்வதேச அளவிலான டெண்டரை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு உருக்காலை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது சர்வதேச தொண்டர் அறிவித்துள்ளதையடுத்து தனியார் யாரும் உருக்காலையை பார்வையிட ஆலையினுள் அனுமதிக்க கூடாது என ஆலையின் பிரதான நுழைவு வாயில் முன்பு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் உருக்காலை ஊழியர்களின் இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு பல்வேறு மத்திய மாநில தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இநிலையில் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், அகில இந்திய தொமுச பேரவை மாநில பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உருக்காலை ஊழியர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்க உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் உருக்காலையை மீட்டெடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உருக்காலைக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்தாலே போதும் எனவும் வலியுறுத்தினர்.

தலைப்புச்செய்திகள்