Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெலிகேம் மூலம் படம் பிடிப்பு: முத்துப்பேட்டை பகுதியில் பல குளங்கள் மாயம்

ஆகஸ்டு 22, 2019 03:24

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் ஹெலிகேம் மூலம் படம் பிடிக்கப்பட்டதில் பல குளங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறு குளங்கள் இருந்தன. ஆனால் தற்பொழுது மங்களூர் ஏரி மற்றும் பட்டறைக்குளம், தாமரைகுளம், அய்யனார்குளம், பெருமாள்குளம், சித்தேரிகுளம், அரசக்குளம், செக்கடிக்குளம், அரபுசாபள்ளி குளம், சேத்துகுளம், புதுக்குளம், சில்லாடிகுளம், கால்நடை ஆஸ்பத்திரிகுளம், சத்திரகுளம் உள்ளிட்ட 42 குளங்கள் மட்டுமே உள்ளன. இந்த குளங்களும் நீண்டகாலமாக முறையான பராமரிப்பு இல்லாததால்  தூர்ந்து வருகின்றன. 

இதில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் சுருங்கிகொண்டே போகிறது. இந்நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் நீர்நிலைகளை பாதுக்காக்கும் நோக்கத்துடன் அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மண்டலம் முழுவதும் பேரூராட்சி பகுதியில் தற்போது பட்டியலில் உள்ள குளங்களை சாதாரண பார்வையிலும், வான்வழி பார்வையிலும் இரண்டு விதமாக புகைப்படங்கள் எடுத்தும், அந்த குளங்களின் சிட்டா அடங்கல் மற்றும் எப்எம்பி ஸ்கெச் ஆகிவைகளை சேகரித்தும் உடன் அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி மூன்றாம் நிலை அலுவலர் செல்வகுமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் ஹெலிகேம் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான குளங்கள் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருப்பதும், பல குளங்கள் மாயமாகிவிட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்