Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டம்: தமிழக அரசு ஒப்புதல்

ஆகஸ்டு 22, 2019 03:36

சென்னை: சென்னையில் அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் நதிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தப் பணிகளை சென்னை ஆறுகள் புனரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணிகளை முடிப்பதற்கு 2 ஆயிரத்து 371 கோடியே 58 லட்சம் ரூபாய் பிடிக்கும் என்று சென்னை பெருநகர கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர் அறிக்கை அளித்துள்ளார்.

இதில், ஆயிரத்து 1 கோடி ரூபாய் செலவில் முதல்கட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரத்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான முதல்கட்டப் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில், முதல்கட்டப்பணிகள் 2022-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

தலைப்புச்செய்திகள்