Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தார்களா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்டு 22, 2019 03:50

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் 2004-ல் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்ததாக கூறுவது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மீதும், பேனர் வைத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக மக்கள் அதிகாரம் அமைப்பு தரப்பு வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார். கடந்த 2004-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு வெளியாகி 13 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், விவிஐபிகளை மலர் தூவி வரவேற்பதற்கு பள்ளி குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

மேலும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பேனர் வைத்ததற்கு உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல் துறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் இரு பக்கங்களிலும் விளம்பர போஸ்டர்கள் மட்டுமே உள்ளதாகவும், புதிதாக யாராவது சென்னைக்கு வந்தால் அவர் எந்த சாலையில் உள்ளார் என கண்டுபிடிக்க இயலாதவாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் விஷவாயு தாக்கி இறந்திருப்பதாக, மக்கள் அதிகாரம் தீவிரமான குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், இது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்