Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்?: மும்பை ஐகோர்ட்

ஆகஸ்டு 23, 2019 05:18

மும்பை: ரூபாய் நோட்டுகளின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது சரியில்லை. குறிப்பாக, பார்வையற்றோர், அதை அடையாளம் காண்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்' என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ரூபாய் நோட்டுகளின் வடிவம் அடிக்கடி மாற்றப்படுவதை எதிர்த்து, பார்வையற்றோருக்கான தேசிய சங்கம், மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, பிரதீப் நந்த்ரஜாக் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வடிவத்தை அடையாளம் காண்பதற்கு, பார்வையற்றவர்களுக்கு அதிக நாட்களாகும். அடிக்கடி ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வடிவத்தை மாற்றி அமைப்பது சரியானதல்ல. இதில், எந்த பிரச்னையையும் மனதில் கொள்ளாமல், அதிகாரம் உள்ளது என்பதற்காக, அடிக்கடி மாற்றலாமா.கள்ள நோட்டு புழக்கத்தை குறைப்பதற்காகவே, இவ்வாறு மாற்றுவதாக கூறுவதை ஏற்க முடியாது.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தின்போது, அனைத்து நோட்டுகளும் திரும்பி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தான் கூறியுள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்க, பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் அவகாசம் கேட்கிறீர்கள். உங்களிடம், உண்மையான, உறுதியான பதில் இருந்திருந்தால், இந்த நேரம் தாக்கல் செய்திருப்பீர்கள்.இவ்வாறு, அமர்வு கூறியது. அதையடுத்து, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கிக்கு, இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்