Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூர் வைசியா வங்கியில் மேலாளர் உள்பட 7 பேர் கைது: 3 கிலோ 710 கிராம் தங்கம் மாயம்

ஆகஸ்டு 23, 2019 09:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைசியா வங்கியில் நகை கடன், விவசாய கடன் உட்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மாதத்திற்கு 2 முறை வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை சரி பார்ப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் வங்கியில் உள்ள தங்க நகைகளை சரிபார்க்கும் போது வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகள் அடங்கிய 40 பாக்கெட்கள் கணக்கில் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகளின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாயாகும். இதனை அடுத்து வங்கியில் வைக்கப்பட்ட நகைகள் மாயமானது குறித்து விழுப்புரம் கோட்ட முதன்மை மேலாளர் முரளி கடந்த ஜீன் மாதம் 4ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றவியல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகை கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளர் சந்தானஅரிவிக்னேஷ் மற்றும் லாவண்யா, தேன்மொழி, இசைவாணி, கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் உள்ள நகைகளுக்கு இந்த 7 பேரும் தான் பொறுப்பு என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையின் போது அனைவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த 7 பேரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் பிரபு முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி 7 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்