Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் காயம்

ஆகஸ்டு 24, 2019 06:56

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை நடந்த மோதலில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில போலீஸ் டிஜிபி டி.எம். அவாஸ்தி கூறியதாவது: 
"
நாராயன்பூர் மாவட்டம், ஆர்ச்சா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, துர்பேடா கிராம வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி பெற்று வருதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் ஆர்ச்சா போலீஸ் நிலையத்தில் இருந்து 20கிமீ தொலைவில் இருக்கும் துர்பேடா கிராம வனப்பகுதிக்கு சென்றோம். இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் படையினர், போலீஸார் இன்று காலை தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பாதுகாப்புப்படையினர் வருவதை அறிந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புபடையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. ஏறக்குறைய இரு தரப்புக்கும் இடையே ஒன்றரை மணிநேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சிலர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

வனப்பகுதியில் இருந்து நக்லைட்டுகள் 5 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள், பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சண்டையில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். தப்பிச் சென்ற நக்சலைட்டுகளையும் பிடிக்கும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்". இவ்வாறு டிஜிபி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்