Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பெண் டாக்டர் தற்கொலை

ஆகஸ்டு 24, 2019 02:10

திருச்சி: கடலூர் மாவட்டம் கீ முஷ்ணம் அம்புஜிவல்லி பேட்டையை சேர்ந்தவர் பொன்னிவளவன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவருக்கு 2 மகள்கள். இதில் 2 வது மகள் டாக்டர் கயல்விழி (வயது 31).

இவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கொண்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கயல்விழி நேற்று இரவு நீண்ட நேரமாகியும் தனது அறையின் கதவை திறக்கவில்லை.

இதையடுத்து அவரது தோழி கதவை தட்டி பார்த்தார். ஆனாலும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அங்கு அறையில் கயல்விழி துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, கயல்விழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாக்டர் கயல்விழி தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். இவருக்கும் வேலூரை சேர்ந்த டாக்டர் சக்திகணேஷ் என்பவருக்கும் கடந்த ஜூலை 11-ந்தேதி தான் திருமணம் நடந்தது. சக்திகணேஷ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இருவருமே முதுகலை படிப்பு படித்து வந்தனர். திருமணம் முடிந்து மீண்டும் திருச்சிக்கு வேலைக்கு வந்த கயல்விழி திடீரென தற்கொலை செய்தது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. திருச்சி வந்த அவரது பெற்றோர் மகள் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 

தலைப்புச்செய்திகள்