Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவலர் தேர்வில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

ஆகஸ்டு 25, 2019 12:52

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பாளர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகிய பிரிவுகளில் 8 ஆயிரத்து 826 காலிப்பணியிடங்களுக்காக 228 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். 

சென்னையில் மட்டும் சுமார் 19 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இத்தேர்வை எழுதி முடித்தபின் வெளியே வந்தவர்கள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை எழுதினர். முன்னதாக, மேலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் 15 ஆயிரத்து 26 பேர் தேர்வெழுதினர். இந்த எழுத்து தேர்வில் பங்கேற்க வந்த தேர்வர்கள் பல்வேறு தீவிர சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.  சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர் ஆகியோர் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூரில் நடைபெற்ற காவலர்களுக்கான எழுத்துத்தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். முன்னதாக தேர்வு மையங்களை  ரயில்வே காவல்துறை தலைவர் வனிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி, தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு நடைபெற்ற மையங்களில் மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்