Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் கைது: உடந்தையாக இருந்த 2 பேரும் சிக்கினர்

ஆகஸ்டு 26, 2019 08:48

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய இளைஞரும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இதில், அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை, திருச்சி டிஐஜி வெ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது, தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரது ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில், கன்னியாகுமரி மாவட்டம் டி.அரசூரைச் சேர்ந்த தேவபிரசாத்(23) என்பவருக்கு பதிலாக, கடலூர் மாவட்டம் கல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி(33) என்பவர் தேர்வு எழுதியது தெரியவந்தது.

இதுகுறித்து ரகுபதியிடம் விசாரித்தபோது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத தேவபிரசாத் மற்றும் அவரது உறவினர் சந்தோஷ்(30) ஆகியோர் தன்னிடம் ரூ.1.50 லட்சம் பேசி, அதில் முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேர்வு எழுதிய ரகுபதி, அவருக்கு உடந்தையாக இருந்த தேவபிரசாத், சந்தோஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


 

தலைப்புச்செய்திகள்