Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை விபத்தில் 6,522 பேர் உயிரிழப்பு: போக்குவரத்துத்துறை கமிஷனர்

ஆகஸ்டு 28, 2019 04:27

சென்னை: மாநில சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், போக்குவரத்துத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், போக்குவரத்து கமிஷனர் சி.சமயமூர்த்தி தமிழகத்தில் நடைபெற்ற விபத்துகளின் விவரங்கள் குறித்து கூறியதாவது:- 
தமிழகத்தில் 2018 ஜனவரி முதல் ஜூலை வரை நடைபெற்ற சாலை விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 526 ஆகும். ஆனால், 2019 ஜனவரி முதல் ஜூலை வரை உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 522 ஆகும். இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைவு. 

2018-ம் ஆண்டு ஜூலை வரை 5 ஆயிரத்து 559 கொடுங்காய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு ஜூலை வரை 2 ஆயிரத்து 979 கொடுங்காய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குறைவு.

மேலும், மொத்த உயிரிழப்பு விபத்துகளில் மோட்டார் சைக்கிள்களால் மட்டும் 41 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களால் 27 சதவீதமும் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்தால் இறந்தவர்கள் 54 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்டதாகும். ஐ.நா. குறிக்கோளின்படி, 2020-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் விபத்துகளை குறைக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பினை குறைப்பதில் 108 ஆம்புலன்ஸ் பெரும்பங்கு வகித்து வருகிறது. தற்போது அரசின் கட்டுப்பாட்டில் 936 ஆம்புலன்சுகள் உள்ளது. இதனுடன் சுமார் 5 ஆயிரம் தனியார் ஆம்புலன்சுகளையும் ஒரே அழைப்பு எண்ணுடன் இணைப்பதன் மூலம் மேலும் குறுகிய நேரத்திற்குள் விபத்து நடந்த இடத்தை அடைந்து உயிரிழப்பினை குறைக்க முடியும்.

அதுபோல, தமிழகத்தில் தற்போது அரசால் இயக்கப்பட்டு வரும் 86 அவசர சிகிச்சை மையங்களுடன் தனியார் அவசர சிகிச்சை மையங்களையும் இணைப்பதன் மூலம் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க உதவும் என அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்