Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஆகஸ்டு 29, 2019 03:33

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015 செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-தேதி ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த முதலீடுகள் இதுவரை தமிழகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை.

பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஜெயலலிதாவை விட ஒரு படி மேலே போய், ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது. 

இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை. முதலீடு அறிவிப்புகள் கானல் நீராகிவிட்டது. 

முதலீடுகள் பெறுவதற்குச் செல்லும் என் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என்று கேட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

துணை முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் நான் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது நான் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கும், மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும் நிதியுதவி பெற்று வந்திருக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடோ, வெளிநாட்டுப் பயணங்களோ, வீண் விளம்பரங்களோ, இல்லாமலேயே முதலீடுகளை பெருமளவில் திரட்ட முடிந்தது.

என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகல்ல. 

நான் வெளிப்படையாக வெளிநாடு செல்வதை மர்மம் என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அவர் கூறியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்