Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறந்த நெசவுத் தொழிலாளியின் கண் தானம்

பிப்ரவரி 24, 2019 01:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த 
நரசிங்கபேட்டை தேவாங்கர் தெருவில் வசித்துவருபவர் எஸ்.மனோகரன். வயது 62. இவரது வாழ்கையில் காணாத துயரத்தை கண்டவர்.

படிப்பறிவற்ற பட்டு நெசவாளர். மனக் கணக்கில் வல்லவர்.  

பட்டுபுடவையின்  எடையை  இழை, குளிகை, தார் கணக்கில் நொடியில் சொல்லுவார். காரணம் தலைமுறை தாண்டியும் மின்னும் ஜரிகையின் தரம். பலமுறை அணிந்தாலும் கசங்காத, எடைநிறைந்த பட்டு, அன்னம், மயில், கலசம், இன்னும் மயக்கும் உருவங்கள். அரக்கு, புவனா, அஜந்தா என்ற கண்ணை பறிக்கும் வண்ணங்கள். புடவையின் ஆயுள்வரை வசிகரிக்கும். கையிலே கலைவண்ணம் கண்டவர்.



மழைகாலம் வேதனைக்காலம். குளிரில் தறியின் மீது ஈரக் காற்று படாமலிருக்க  துணிகளையெல்லாம் அதன் மீது போர்த்துவார். மழைப் பெய்த்தால், தறி அச்சுமரம் நகராது. பேட்டு டிசைனும் விழாது, தறி அசையாது. சோறு ஒருவேளை மட்டும்தான். முடிச்ச சேலையை அறுக்க முடியாது. சேலை நமுத்து ஒடிஞ்சி போயிடும். விறைப்பா இருக்காது.  

வெயில் வந்தாதான் சேலையை அறுக்க முடியும். 
ஆயிரம் கஷ்டப்பட்டாலும், தொழில் கை இழக்காமல் வாழ்ந்து வந்தார். தறி நெய்ய முடியாத வயதான காலத்திலும் பட்டு, கோறா, கூலிக்கு  இழைப்பது, சேலைகளுக்கு தைக்கும் பார்டர் நெய்வது என வாழ்க்கையையே  தறியுடன் முடிப்பார். இப்படி வாழ்வில் நெசவுக்கு என்று அரும்பாடுபட்டவர் நம் மனோகரன் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

இறந்த முதியவரின் இரண்டு கண்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதனை தொடர்ந்து அவது இரண்டு கண்களையும் கும்பகோணம் கிராட் ரோட்டரி சங்கம், நரசிங்கபேட்டை ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண்தானத்தை பெற்றுக் கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்