Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12,500 ஆயுஷ் சுகாதார மையங்கள் இன்னும் 3 ஆண்டுகளில் திறக்கப்படும்: பிரதமர் மோடி

ஆகஸ்டு 31, 2019 04:01

புதுடெல்லி: யோகாவை முன்னேற்ற சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பிரதமரின் யோகா விருது வழங்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆண்டுதோறும் யோகா விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

பிரதமர் மோடி, விருதுகள் வழங்கினார். இந்திய மருத்துவ முறைகளான ‘ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி’ (ஆயுஷ்) ஆகியவற்றில் திறமையான அறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரை கவுரவிக்கும்வகையில் 12 சிறப்பு தபால் தலைகளை அவர் வெளியிட்டார். அரியானா மாநிலத்தில், 10 ஆயுஷ் சுகாதார மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர், மோடி பேசியதாவது:- ‘பிட் இந்தியா’ திட்டத்தை தொடங்கியதற்கு மறுநாள், யோகா, ஆயுஷ் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது பொருத்தமாக அமைந்துள்ளது. ‘பிட் இந்தியா’ திட்டத்துக்கு யோகாவும், ஆயுஷ்-ம் இரண்டு தூண்கள் ஆகும்.

ஒருவரது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், வளமைக்கும் திறவுகோலாக ‘யோகா’ திகழ்கிறது. நாடு முழுவதும் இன்னும் 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 ஆயுஷ் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் 4 ஆயிரம் மையங்கள் இந்த ஆண்டு திறக்கப்படும்.

அரியானா மாநிலத்தில் 10 ஆயுஷ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார், தீவிர சுற்றுப்பயணம் செய்து பேசியதால், அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இது, எல்லா தலைவர்களுக்கும் ஏற்படுவதுதான் என  மோடி பேசினார். 

தலைப்புச்செய்திகள்