Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் ஆவேசம்

ஆகஸ்டு 31, 2019 04:14

சென்னை: தமிழகத்தில் புராதன சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது. அவருக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும், ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த பொன் மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு செல்லும் அதிகாரிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை. அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்குக்கூட இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.

ஐகோர்ட்டு உத்தரவிட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் ஆவணங்களைக் கேட்டால், தரமறுத்தார். ஏன்? என்று காரணம் கேட்டதற்கு ஆவணங்களைக் கொடுத்தால் தன்னை இடைநீக்கம் செய்துவிடுவதாக கூடுதல் டி.ஜி.பி., ஒருவர் மிரட்டுவதாக கூறுகிறார்.

இதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சிலை கடத்தல் தொடர்பாக ஒரு வழக்கு கூட எங்களால் பதிவு செய்ய முடியவில்லை என்று ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், “சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும், அதை செய்து கொடுக்காமல் அரசு தொடர்ந்து உத்தரவை அவமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கிற்கு தமிழக அரசு வருகிற செப்டம்பர் 11-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்