Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்டோ ஓட்டுநரை ஷூ காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஆகஸ்டு 31, 2019 01:48

கும்பகோணம்: கும்பகோணத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்தது மற்றும் ஆட்டோ ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் எட்டி உதைத்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு காவல் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கும்பகோணம் அரசு கல்லூரியில் விலங்கியல் பிரிவில் எம்ஃபில் பயின்று வரும் மாணவி ஒருவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க தனது வழிகாட்டியான பேராசிரியர் ரவிச்சந்திரன் சாதி ரீதியாக தன்னை திட்டியதாகக் கூறி ஆய்வகத்தில் இருந்த உயிருக்கு ஆபத்தான ரசாயனத்தை அருந்தினார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், பாலியல் துன்புறுத்தல் என்ற தலைப்பில் பத்திரிகைச் செய்தி வெளியானது.  இதே போன்று கடந்த 28ம் தேதி வண்டுவாஞ்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வீரமணி என்பவர் தகராறு ஒன்றின் காரணமாக தனது நண்பர் ராஜேஷை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார்.

அப்போது பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கபீர்தாஸ் இருவரையும் சாதி பெயரைக் கேட்டு ஷு காலால் எட்டி உதைத்தாகவும் செய்தி வெளியானது. இந்த இரு செய்திகளையும் மேற்கோள் காட்டிய மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்க முன்வந்தது.

இதையடுத்து இந்தச் சம்பவங்கள் குறித்து இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு சென்னையில் உள்ள கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் இந்த இரு சம்பவங்களிலும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 

தலைப்புச்செய்திகள்