Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரில் சென்றவருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராத நோட்டீஸ்

செப்டம்பர் 01, 2019 08:14

சென்னை: சென்னையில், காரில் பயணித்தவருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று, போக்குவரத்து காவல்துறையினர் ஆன்லைனில் அபராத நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஹெல்மெட் சோதனை செயலியின் பரிதாப செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரணீஸ்வரனின் மனைவி நந்தினியின் பெயரில் உள்ள ஸ்கோடா ராபிட் காரின் பதிவெண்ணை குறிப்பிட்டுத் தான் ஹெல்மெட் போடவில்லை என்று அபராத நோட்டீஸ் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ந்தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் தலைகவசம் அணியவில்லை என்பதால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக வழக்கறிஞர்  பரணீஸ்வரனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது.

அது குறித்து ஆன்லைனில் காவல்துறையின் பிரத்யேக செயலிக்குள் சென்று பார்த்தால், பரணீஸ்வரனின் மனைவி நந்தினியின் பெயர், வழக்கறிஞர் பரணீஸ்வரனின் செல்போன் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அபராத நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, அந்த நோட்டீசில் குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்த பகுதியில் செல்லவில்லை என்றும், தனக்கு சொந்தமாக இரு சக்கர வாகனம் ஏதும் கிடையாது என்றும், போக்குவரத்து காவல்துறையின் செயலியை கையாளும் காவலர்களின் பொறுப்பற்ற செயல்பாட்டால் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பரணீஸ்வரன் , போக்குவரத்து இணை ஆணையர் ஜெயகவுரியை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்தார். இதில் எப்படி தவறு நிகழ்ந்தது ? என்பதை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக இணை ஆணையர் ஜெயகவுரி தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதில் போக்குவரத்து காவல்துறையினர் ஸ்ரிக்ட்டாக நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இருந்தாலும் கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராத நோட்டீஸ் அனுப்புவதா என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

தலைப்புச்செய்திகள்