Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை: ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து

செப்டம்பர் 01, 2019 10:34

சென்னை: தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் தமிழிசை நியமனம் தமிழகத்துக்கு பெருமையாகவே கருதுகின்றனர். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்! அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் என்றார். 

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த அவருக்கு இப்பதவி அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்றார். 

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் (திரு. குமரி அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக் கழக எனது சக மாணவத் தோழர்) டாக்டர் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்றார். 

ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்பி பாரிவேந்தர் உள்ளிட்டோரும் தமிழிசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்