Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயில்வேக்கு 4 ஆண்டுகளில் தட்கல் டிக்கெட் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருமானம்

செப்டம்பர் 01, 2019 11:07

மும்பை: ரெயிலில் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வசதிக்காக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்போது குறிப்பிட்ட ரெயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த முறை 2004-ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ரெயில்களில் 2-ம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 30 சதவீத அடிப்படை கட்டணமும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரெயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர்கவுர் என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு அளித்த பதில் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது 2016 முதல் 2019 வரையிலான 4 ஆண்டுகளில் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து ரூ.21,530 கோடியும், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து கூடுதலாக ரூ.3,862 கோடி என மொத்தம் ரூ.25,392 கோடி கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெயில்வே புள்ளி விவரங்களின்படி தட்கல் திட்டம் தற்போது 2677 ரெயில்களில் உள்ளது. இம்முறையில் 1 லட்சத்து 71 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்