Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வறுமையில் வாடும் வலுதூக்கும் வீரருக்கு திமுக எம்.எல்.ஏ உதவி

செப்டம்பர் 02, 2019 05:49

திருவாரூர்: வறுமை காரணமாக சித்தாள் வேலைக்குச் சென்று வரும் தேசிய அளவில் சாதித்த வலுதூக்கும் வீரருக்கு, மன்னார்குடி எம்.எல்.ஏ உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. 25 வயதான இவர் மிகசாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் பிளஸ் 2 வரை படித்து, குடும்ப வறுமை சூழல் காரணமாக கட்டட சித்தாள் வேலைகளுக்கு சென்று வருகிறார். வறுமை வாட்டி எடுத்தாலும், உடற்பயிற்சி மற்றும் வலுதூக்குதலில் இவருக்கு சிறு வயது முதலே அதிக ஆர்வம் இருந்தது.

முதலில் முறையான பயிற்சி இல்லாமல் சில போட்டிகளில் பங்கேற்று தோல்விகளை சந்தித்த கோவிந்தசாமி, அதன் பின்னர் முறையான பயிற்சி பெற்று பல போட்டிகள் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தார். வெற்றிகளுக்கு கிடைத்த கோப்பை, சான்றிதழ்கள், பதக்கங்களை கூட வீட்டில் வைப்பதற்கு இடமில்லாமல் இருக்கிறார்.

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் உதவும் கரங்கள் என்ற அமைப்பின் உதவியோடு பங்கேற்று 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 7 தேசிய அளவிலான பதக்கங்களை பெற்றுள்ள கோவிந்த சாமியால், வறுமை காரணமாக அடுத்தகட்டத்துக்கு முன்னேற முடியவில்லை.

கடந்தாண்டு சுவீடன் நாட்டில் நடைபெற்ற உலக வலுதூக்கும் போட்டியிலும், கடந்த மேமாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற ஏசியாட் வலுதூக்கும் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்க கோவிந்தசாமிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பயணத்திற்கு மட்டுமே லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டதால் இவரால் அந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. திறமை இருந்தும் வசதி இல்லாததால் அவரால் சர்வதேச அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்நிலையில், கனடாவில் நடைபெறவுள்ள 13வது காமன்வெல்த் போட்டிகளில் 66 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க கோவிந்த சாமி தேர்வாகியுள்ளார். ஆனால், இப்போட்டிகளில் பங்கேற்க குறைந்தபட்சம் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் என்பதால், கோவிந்தசாமி பலரின் உதவியை நாடினார். மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு அளித்தார்.

கோவிந்தசாமி குறித்து அறிந்த மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, அவரை நேரில் வரவழைத்து போட்டியில் பங்கேற்பதற்கான செலவுகளையும் அதற்குரிய அதிகாரிகளிடமும் முறையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்