Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

செப்டம்பர் 02, 2019 10:48

சென்னை: தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது. 

குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. இதேபோல் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையும் மிக அதிகமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் வரும்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்படும் என்று அப்போது அமைச்சர் விளக்கம் அளித்தார். 

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அப்போது அமைச்சர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்