Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே குடும்ப அட்டை திட்டத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் நடத்துவோம்: கே.எஸ்.அழகிரி

செப்டம்பர் 05, 2019 08:55

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அதிகார குவியலை நோக்கி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒற்றை ஆட்சி முறையை அமல்படுத்துவதற்கு பல்வேறு உத்திகளை பா.ஜ.க. கையாண்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே தேர்தல் நடத்துவதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல, மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண தற்போது உள்ள நடுவர் மன்றங்களை கலைத்து விட்டு ஒரே நதிநீர் தீர்ப்பாயத்தை அமைக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, கல்வி மற்றும் சுகாதாரத்துறையை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற நடவடிக்கைகளை எடுத்து வரும் பா.ஜ.க. அரசு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இதன்படி வருகிற ஜூன்1, 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை அமல்படுத்த திட்டம் தீட்டி வருகிறது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் இத்தகைய குடும்ப அட்டைகள் மூலம் எந்த மாநிலத்திலும் நியாய விலைக்கடைகள் மூலம் உணவு பொருட்களை பெற முடியும். தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மார்ச் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதைவிட மாநில உரிமைகளை பறிக்கிற மத்திய அரசுக்கு துணைபோகிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

நடைமுறை சாத்தியமில்லாத இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு எந்த அடிப்படையில் ஒப்புதல் தந்தது என்று தெரியவில்லை. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கிற பா.ஜ.க. அரசின் திட்டத்திலிருந்து உடனடியாக தமிழக அரசு விலக வேண்டும். விலகுவதற்கு துணிவில்லாமல் பா.ஜ.க. அரசின் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளை நிறைவேற்ற அரசு தொடர்ந்து முனையுமேயானால் அதை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்