Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடி வாலிபருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

செப்டம்பர் 05, 2019 09:00

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த புதிய சட்டத்தின்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் என்ற விதிமுறைகள் 1-ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன.

புதிய சட்ட விதிமுறைகள் மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதே நேரம் கர்நாடகா உள்ளிட்ட பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் முழுவதிலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் பிடிக்கும்போது பழைய சட்ட விதிகள் படிதான் அபராதம் விதிக்கின்றனர். புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசிடம் இருந்து உரிய உத்தரவு வந்த பின்னர்தான் புதிய விதிப்படி அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது புதிய சட்டவிதிகள்படி அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்வா என்ற வாலிபருக்கு போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தூத்துக்குடியில் போதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு புதிய வாகன சட்டப்படி அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்தோணியார் புரத்தை சேர்ந்த சண்முக நாதன் (29) என்பவர் லைசென்சு இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டி வந்துள்ளார்.

போலீஸ் சோதனையில் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகநாதன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தூத்துக்குடி ஜூடிசியல் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சண்முகநாதனுக்கு போதையில் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரம், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் இருந்ததற்கு ரூ.1000 என மொத்தம் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை அவர் கோர்ட்டில் செலுத்தி பறிமுதல் செய்யப்பட்ட தனது பைக்கை மீண்டும் பெற்றுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்