Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொருளாதார மந்தம்: மத்திய அரசு மவுனம் காப்பது ஆபத்தானது என பிரியங்கா காந்தி எச்சரிக்கை

செப்டம்பர் 05, 2019 09:11

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்நது மவுனம் காத்து வருவது மிகவும் ஆபத்தாக முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எச்சரித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.

பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது

மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டுவரும் புள்ளி விவரங்கள் வாயிலாக அறிய முடிகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் தனது உற்பத்தியை வரும் 7 மற்றும் 9-ம் தேதிகளில் ஹரியாணா தொழிற்சாலையில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசோ பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை, சரிவு ஏற்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பொருளதாரச் சரிவு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டு அதைச் சரிசெய்வதற்கான வழிகளை மத்திய அரசு காண வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்து அறிவுறுத்தியுள்ளார். சிவசேனா கட்சியும் தேசநலனைக் கருத்தில் கொண்டு மன்மோகன் சிங் கூறிய அறிவுரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பொருளாதார மந்தநிலை குறித்து தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் இன்று அவர் பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது (எக்கானமி இன் கிரிஸிஸ்) என்று ஹேஷ்டேக் இட்டு அதில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், "கவுண்ட் டவுன், நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து நாள்தோறும் செய்திகள் வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தான போக்கு. மன்னிப்பு கேட்பதும், வார்த்தைகளால் சமாளிப்பதும், வதந்திகளும் எந்தவகையிலும் பயனளிக்காது.

மத்தியில் ஆளும் அரசுக்கு பொருளாதார மந்தநிலைக்குத் தீர்வு காண்பதற்கு வழியும் இல்லை, மக்களிடம் வாக்குறுதி அளிப்பதற்கு வலிமையும் இல்லை" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்