Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடன் வாங்கி மோசடி: வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது வழக்கு

செப்டம்பர் 09, 2019 11:52

தஞ்சை: விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிகளில் கடன் பெற்றது தொடர்பாக  சர்க்கரை ஆலை மற்றும் வங்கி அதிகாரிகள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விவசாயிகளிடம் பல ஆண்டுகளாக பெற்ற கரும்புக்கு 30 கோடிக்கு மேல் நிலுவைத்தொகை உள்ளதாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவைத்தொகை தருவதாக கூறி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் விவசாயிகளிடம் கையொப்பம் பெற்று அதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்பரேஷன் வங்கிகளிடம் வழங்கி விவசாயிகள் ஒவ்வொருவரின் பெயரிலும் 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை என மோசடியாக 350 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.இதையடுத்து கடனை வட்டியோடு திருப்பி செலுத்துமாறு வங்கிகளிடமிருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் வந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். 

நேற்று முன்தினம் பாபநாசம் அடுத்த அரசலாற்று படுகையை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார். அதில், ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பை வெட்டி அனுப்பி வைத்தேன். இந்நிலையில் கும்பகோணம் கார்ப்பரேஷன் வங்கியில் கடன் வாங்கியதாகவும் அந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டுமென நோட்டீஸ் வந்தது. அதில் 2018ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வங்கிலிருந்து 23 லட்சம் பெற்ற கடன் தொகையும், மே 31ம் வரை வட்டியுடன் சேர்ந்து 28,44,607 கட்ட வேண்டுமென இருந்தது. 

இந்நிலையில் மீண்டும் அதே வங்கியிலிருந்து 34.70 லட்சம் கடனை திருப்பி செலுத்துமாறு நோட்டீஸ் வந்தது.இதுதொடர்பாக விசாரித்தபோது 213 விவசாயிகள் பெயரில் இதுபோன்று மோசடியாக ஆலை நிர்வாகம் பணம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து திருஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர், நிர்வாகிகள், கார்ப்பரேஷன் வங்கி நிர்வாகிகள் உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
அதன் அடிப்படையில் ஆலை நிர்வாகம் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், போலியாக ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்