Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை

செப்டம்பர் 09, 2019 12:01

இராமநாதபுரம்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இராமநாதபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனது சுயமரியாதையை விட்டுத்தர முடியாததால் தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது மக்களாட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 10 அமைச்சர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வது ஏதாவது காரணமாக இருக்கலாம்.

இந்த பயணம் நல்ல முன் மாதிரி அல்ல. தமிழ்நாட்டில் நிர்வாகம் என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. அவரது கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் 28 ஏரிகளை தூர்வாரி சீரமைத்து உள்ளோம். ரஜினி பா.ஜ.க.வில் இணைந்தாலும் அல்லது தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் குடி மராமத்து பணிகள் சரியாக நடைபெறவில்லை. முறைகேடு நடைபெறுகிறது.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளனர். காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை தமிழகம், கேரளாவிற்கும் வரக்கூடிய ஆபத்து உள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து இடம் பெற்றுள்ளது. கல்வித்துறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடியது.

எந்த துறையிலும் சிறு முன்னேற்றம் கூட அடையவில்லை. காங்கிரஸ் காலத்தில் 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதை மறைக்க ஜாதி, மத, மொழி, கடவுள் ஆகியவற்றை மையமாக வைத்து அரசியல் செய்கின்றனர் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்