Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கிகளில் நகை கடன் விவசாயிகளுக்கு நிறுத்தப்படுவதாக கூறுவது தவறான தகவல்: எச்.ராஜா

செப்டம்பர் 11, 2019 09:29

மயிலாடுதுறை: மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். இணைய தளம் வாயிலாக தி.மு.க.வினரை கொண்டு இதுபோல் தகவல்களை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. அவர் கூறுவது போல் எந்த கேள்வியும் அதில் இல்லை.

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளார். இதனால் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். மேலும் விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

சாலை விதிகளை மதிப்பது, ஹெல்மெட் அணிந்து செல்வது போன்ற சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து இந்தியாவை கட்டுப்பாட்டுடன் கூடிய நாடாக பிரதமர் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் எதிர்தரப்பினர் அனைத்து திட்டங்களையும் விமர்சித்து மக்களை குழப்பி திசை திருப்ப முயல்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ப.சிதம்பரம். கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் போன்றவர்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளனர். இவர்கள் ஊழல் செய்தே சொத்துக்களை சேர்த்து உள்ளனர். அதனாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இதேபோல் தமிழகத்தில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவில் ஊழல் செய்துள்ளதாக தெரியவருகிறது. விரைவில் அவரும் கைது செய்யப்படுவது உறுதி என அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்