Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அவினாசி: போலி மத்திய அரசு அதிகாரி சிறையில் அடைப்பு

செப்டம்பர் 13, 2019 01:17

அவினாசி: சேலம் மாவட்டம் முத்து நாயக்கர் காலனி சிவநாதபுரத்தை சேர்ந்தவர் நீலமேகம் (31). இவர் தனது நண்பர் செந்தில் குமாருடன் திருப்பூர் மாவட்டம் தெக்கலூருக்கு கடந்த 9-ந் தேதி இரவு காரில் வந்தார். இருவரும் ஒரு கடையில் இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் நீல மேகத்தை அவரது காரில் கடத்தி சென்றது.

இது குறித்து அவரது நண்பர் செந்தில் குமார் அவினாசி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், காமராஜ் ஆகியோர் நீலமேகத்தின் செல்போன் எண் மூலம் விசாரித்தனர். அப்போது அவரை கடத்தி சென்ற கார் ஈரோடு நோக்கி செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவினாசி போலீசாரும் விரைந்து சென்றதில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சோதனை சாவடியில் காருடன் நீலமேகம் இருந்ததும், அவரை கடத்தி சென்ற கும்பல் அவர் அணிந்திருந்து செயினை பறித்து கொண்டு அவரையும், அவரது காரையும் அங்கு விட்டு விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

நீலமேகத்தை மீட்ட போலீசார் அவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் போலி மத்திய அரசு அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பீப்பிள் பிரண்ட் ஆப் இந்தியா, பாரத் சேவக் சமாஜ் ஆகிய என்.ஜி.ஓ. அமைப்புகளின் தென்னிந்திய துணைத் தலைவர் என்று கூறி மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் நீலமேகம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

மத்திய அரசு அதிகாரி போல் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் இந்திய அரசு பெயர் பலகையுடன் பந்தாவாக வலம் வந்ததால் இவரை பலரும் நம்பி உள்ளனர். மத்திய அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டை வைத்துள்ள நீலமேகம் தனது பெயருக்கு முன் டாக்டர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய விஜிலன்ஸ் கமி‌ஷனர் வழங்கியதாக நற்சான்றையும் வைத்து உள்ளார்.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் கிருபாகரனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1 லட்சம் கேட்டுள்ளார். பணத்துடன் கிருபாகரன் தெக்கலூரில் தயாராக இருந்த போது தான் நீலமேகம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

அவரை கடத்தி நகை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரி என மோசடியில் ஈடுபட்ட நீல மேகத்தை அவினாசி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசார் நீலமேகத்தை அவரது காரில் அழைத்து வந்த போது காரில் உள்ள மத்திய அரசு முத்திரையை பார்த்து ஆங்காங்கே உள்ள சோதனை சாவடி ஊழியர்கள் சல்யூட் அடித்ததை பார்த்து போலீசாரே ஆச்சரியம் அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்