Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிபிஐக்கு லஞ்சம்: கட்டுமான நிறுவன துணைதலைவர் கைது

செப்டம்பர் 14, 2019 06:44

புதுடில்லி: சிபிஐ வழக்கில், தங்களுக்கு சாதகமாக அந்த அமைப்பு நடந்து கொள்ள ரூ.2 கோடி லஞ்சம் தர முயன்ற கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த சோமா எண்டர் பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு உள்ளது. இந்த வழக்கில், தங்களுக்கு சாதகமாக நடக்க அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க தயாராக இருந்துள்ளார். அவர் சார்பாக, இடைத்தரகர் தினேஷ் குமார் குப்தா மூலம் உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரியும் தீரஜ் சிங் என்பவர் மூலம் வழக்கை விசாரிக்கும், சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்க்கிற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

இதற்காக, அஸ்ரா கார்க்கை, சந்தித்த தீரஜ் சிங், தினேஷ் சிங் குப்தாவை அறிமுகம் செய்துள்ளார். அப்போது, இருவரும், கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவ வேண்டும். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் தர தயாராக உள்ளதாக அஸ்ரா கார்க்கிடம் கூறியுள்ளனர். இது குறித்து அஸ்ரா கார்க் சிபிஐ உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க வேறொரு அதிகாரியை சிபிஐ நியமித்தது. 

இதன் ஒரு பகுதியாக, இரண்டு பேரையும் அழைத்து பேசவும், அப்போது அவர்களின் பேச்சை பதிவு செய்வதற்கான கருவிகளுடன் அதிகாரி ஒருவரை டிரைவராக சிபிஐ நியமித்தது. இதன்படி டில்லியின் சிஎன்ஜி ரயில் நிலையம் அருகே கடந்த புதன்கிழமை(செப்.,11) இரவு சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அஸ்ரா கார்க் தனது அரசு வாகனத்தில், சிபிஐ ஏற்பாடு செய்த டிரைவருடன் வந்தார். அவரது வாகனத்தில் தீரஜ் சிங் மற்றும் குப்தா ஏறினர். 

அப்போது, வழக்கை சுமூகமாக முடித்து கொடுத்தால் ரூ.2 கோடி லஞ்சம் தருவதாக தெரிவித்தார். மேலும் ரூ.10 லட்சம் முன்பணமாக, அஸ்ரா கார்க் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து, குப்தா, தொலைபேசி மூலம் கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராவை, அஸ்ரா கார்க்குடன் பேசவும் வைத்தார். அப்போது, ராவ் சார்பில், குப்தா பேசுவது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு திரும்பிய அஸ்ரா கார்க் மற்றும் டிரைவர், காரில் நடந்த உரையாடலை அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம்(செப்.,12) தீரஜ் சிங் மற்றும் குப்தாவை கைது செய்தது. அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்று, ராமச்சந்திர ராவை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 
 

தலைப்புச்செய்திகள்