Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொலைந்த துணைநிலை ஆளுநரின் செல்போன்: ஒரு மணி நேரத்தில் கண்டுப்பிடிப்பு

செப்டம்பர் 14, 2019 07:47

புதுச்சேரி: ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் கிராமப் பகுதிகள், அங்கிருக்கும் நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தூய்மைப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கிரண் பேடி. அதன்படி தற்போது மழைக்காலத்திற்கு முன்பாக ஏரி மற்றும் குளங்களைச் சீரமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்குச் சென்ற அவர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏரியைச் சுற்றி 3,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஏரியின் சுற்றுப்பகுதிகளுக்கு காரில் செல்ல முடியாது என்பதால் அதைச் சுற்றிப் பார்க்க 3 மாட்டு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாட்டு வண்டியின் மீது ஆர்வத்துடன் ஏறிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது விலையுயர்ந்த ஐபோன் மூலம் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்து வந்தார். ``பசுமை புதுச்சேரி” என்று உற்சாகமாக கோஷமிட்ட அவர் மற்றவர்களையும் கூறச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.

அப்போது சேறும் சகதியுமாக இருந்த பகுதியில் மாட்டு வண்டி தள்ளாட்டத்துடன் சென்றதால் செல்போனை தனது பெண் உதவியாளரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் மீண்டும் அவர் செல்போனைக் கேட்கும் போதுதான் செல்போன் காணாமல் போனது தெரியவந்தது.

உடனே அதுகுறித்து விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் செல்போன் காணாமல் போனதால் காவல் துறையினரும், ஆளுநர் மாளிகை ஊழியர்களும் பதறிப் போனார்கள். தொடர்ந்து ஏரி முழுவதும் சல்லடையிட்டு காணாமல் போன செல்போனைத் தேடினார்கள். ஒரு மணி நேரத் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு ஏரிக்கரையின் வயல் பகுதியில் முற்றிலும் உடைந்து நொறுங்கிய நிலையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆளுநர் கிரண் பேடி கொடுத்த செல்போனை மாட்டு வண்டியில் வைத்திருக்கிறார் அவரது பெண் உதவியாளர். அப்போது கீழே தவறி விழுந்த செல்போன் மீது மாட்டு வண்டி ஏறியதால் உடைந்து நொறுங்கிவிட்டதாகத் தெரிகிறது. துணைநிலை ஆளுநரின் செல்போனில் பல்வேறு முக்கிய தகவல்களும், ஆவணங்களும் இருப்பதால் அவற்றை மீட்டெடுக்கும் பணியில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அதிகாரி குமாரைத் தொடர்புகொண்டு பேசியதில். ``ஆளுநரின் செல்போனை அவரது உதவியாளர் கை தவறி கீழே விட்டுவிட்டார். அது ஏரிக்குள்தான் கிடந்தது. ஆளுநரின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து அந்த ரிங்டோன் சத்தத்தின் மூலம் உடனே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது" என்றார்.

தலைப்புச்செய்திகள்