Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு

செப்டம்பர் 15, 2019 05:00

புதுடெல்லி: கோவை ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். முதலில் 25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கிய கமலாத்தாள், விலைவாசி உயர்வால் தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தற்போதுள்ள சூழ்நிலையில் ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாளை நாடு முழுவதும் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் பலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர்.

மகேந்திரா குரூப் தலைவர் ஆனந்த் மகேந்திரா கமலாத்தாள் பாட்டியின் தொழிலை மேம்படுத்த முதலீடு செய்ய விரும்புவதாகவும், கியாஸ் அடுப்பு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் கமலாத்தாள் பாட்டியை அணுகி கியாஸ் இணைப்பை வழங்கினர். மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் கிரைண்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பாராட்டியுள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில், கோவை வடிவேலம்பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்