Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் 25ம் தேதிக்குள் தேர்தல்

பிப்ரவரி 25, 2019 09:54

புதுடெல்லி: நடக்கப்போகும் லோக்சபா தேர்தலுக்கான தேதியை வரும் மார்ச் 7 ம் தேதி அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் 25ம் தேதிக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.16-வது லோக்சபாவின் பதவிக்காலம் ஜூன் 3-ம் தேதி முடிகிறது. எனவே தேர்தல் நடைமுறைகளை மே மாதத்துடன் முடித்துவிட தேர்தல் ஆணையம் எண்ணுகிறது. 

2014ல் லோக்சபா தேர்தல், ஏப்ரல் 7ல் தொடங்கி  மே 12 வரை 9 கட்டங்களாக நடந்தது. மே 16ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன. இம்முறை 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த முறை தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 24 தேர்தல் நடந்தது. கர்நாடகாவில் ஏப்ரல் 17லும், கேரளாவில் ஏப்ரல் 10ந்தேதியும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஏப்ரல் 30 மற்றும் மே 7ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது. 

இதை வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் நடந்த தேதியை ஒட்டியே, அதாவது ஏப்ரல் 20 முதல் 25ம் தேதிக்குள் ஓட்டுப்பதிவு நடக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடக்கப்போகும் லோக்சபா தேர்தலுக்கான தேதியை வரும் மார்ச் 7 ம் தேதி அல்லது மார்ச் 10 ந்தேதி அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் 25ம் தேதிக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் எப்போது என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சி நடந்துவரும் காஷ்மீரில் சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டி இருப்பதால், அங்கு நிலவும் சூழ்நிலையை ஆராய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் மார்ச் 4, 5ம் தேதிகளில் காஷ்மீர் செல்கின்றனர். அங்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காஷ்மீர் தவிர, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் முறையே ஜூன் 18, ஜூன் 1, ஜூன் 11, மே 27 தேதிகளில் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. இம்மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக அந்தந்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

வரும் மார்ச் 6-ம் தேதி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே, மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டத்தையும் மோடி கூட்டுகிறார். 

இம்முறை நாடு முழுவதும் 22.3 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 16.3 லட்சம் கன்ட்ரோல் யூனிட்டுகளும், 17.3 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் 50 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சோதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி இருந்தன. இது இப்போதைக்கு சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இருப்பினும், ஒப்புகை சீட்டு தரும் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. 
 

தலைப்புச்செய்திகள்