Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி நிறுவனம் மூலம் 20 இளம் பெண்களை கடத்தி உல்லாசம்: 7 பேரை திருமணம் செய்த காதல் மன்னன் கைது

செப்டம்பர் 16, 2019 05:12

சென்னை: சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் கவிதா(23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள கவின்ஸ் மேனேன்மென்ட் சொலியூஷன் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 30ம் தேதி காலை கவிதா வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவிதாவை அவரின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் கவிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே காணாமல் போன மகளை மீட்டு கொடுக்கும் படி கவிதாவின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி எழும்பூர் போலீசார் மாயமான கவிதாவை தேடினர். மேலும், சிசிடிவி பதிவுகளை பெற்று போலீசார் நடத்திய விசாரணையில் கவிதா வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி (29) என்பவரால் கடந்த ஜூன் 30ம் தேதியே காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.

தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் கவிதா திருப்பூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் பகுதிக்கு சென்று சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது ஒரு வீட்டில் கவிதா அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து கவிதாவை மீட்டுனர். அப்போது கவிதா தன்னை ராஜேஷ் பிரித்வி கடத்தி மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கடுமையாக தொந்தரவு செய்ததாக கூறி அழுதார். பிறகு போலீசார் கவிதாவை கடந்த 9ம்தேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கவிதா கொடுத்த புகாரின் படி தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் பிரித்வியை தேடி வந்தனர். 

இதற்கிடையே நேற்று கவிதா வீட்டிற்கு சென்ற ராஜேஷ் பிரித்வி, எனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறி கவிதாவின் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கவிதாவின் பெற்றோர் அளித்த தகவலின் படி தனிப்படை போலீசார் விரைந்து சென்று திருப்பூர் நொச்சிப்பாளையம் மேற்கு வீரபாண்டி விரிவு பகுதியை சேர்ந்த ராஜேஷ் பிரித்வியை அதிரடியாக கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ராஜேஷ் பிரித்வி 7ம் வகுப்பு மட்டும் படித்துள்ளார். 10ம் வகுப்பு தனித் தேர்வு எழுதியுள்ளார். ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்ததால்  போலி நிறுவனம் தொடங்கி எனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும் என கூறி தமிழகம் முழுவதும் மருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றி வந்துள்ளார். தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் பெண்களை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி 20க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

இவர் தமிழகம் முழுவதும் தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன், பெருமாள், ராஜேஷ் பிரித்வி என 5 பெயர்களில் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து எழும்பூர் போலீசார் காதல் மன்னன் ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். பிறகு அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, அவரது அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் சீருடை, போலி உதவி ஆய்வாளருக்கான அடையாள அட்டை, போலியான ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குற்றவாளியை கைது செய்யும் கைவிலங்கு ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்