Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் மறுப்பு

செப்டம்பர் 16, 2019 05:21

ஐதராபாத் : புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என மேற்குவங்க அரசு ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் தங்கள் மாநிலத்திலும் புதிய சட்டம் அமல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிகப்படியாக அபராதம் விதிக்க வழிவகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டம் செப்.,1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அபராத தொகையை குறைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த புதிய சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

மம்தாவை தொடர்ந்து சந்திரசேகர ராவும் புதிய சட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம். எங்களுக்கென தனிச்சட்டம் கொண்டு வருவோம். கடுமையான அபராதத்தை விதித்து மக்களை வதைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார்.

தெலுங்கானா போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து அமல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்