Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையில் கிடந்த மின்சார வயர்: அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோன ஒரு உயிர்

செப்டம்பர் 16, 2019 06:40

சென்னை: சென்னை போரூரை அடுத்துள்ள முகலிவாக்கம் சுபஸ்ரீ நகர் நாலாவது விரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில் வனிதா தம்பதியினர். செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இதில் பெரிய மகனான தீனா என்பவர் எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன்பாக கார்ப்பரேஷன் பணிகளுக்காக பள்ளம் தோண்டி உள்ளனர். ஆனால் அந்த பணி இன்னும் முடிவடையவில்லை. மேலும், இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் மின்சார வயர்களை சரிசெய்யாமல் தரை மேலேயே போட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் மழை நீர் தேங்கி இப்பகுதி முழுவதும் குட்டையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் செந்தில் வனிதா தம்பதியின் மூத்த மகனான தீனா, நேற்று தனது தந்தையின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அந்த வழியாக வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தண்ணீர் தேங்கிய இடத்தில் தரை மேல் செல்லும் மின்சார வயரில் தெரியாமல் காலை வைத்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தீனா மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரிலேயே விழுந்து பேச்சு மூச்சில்லாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் உடனடியாக மின்சார அலுவலகத்திற்கு கால் செய்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு தீனாவை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து போய் இருப்பது தெரியவந்தது.

மின்சார வயரை சரி செய்யாமல் சாலையிலே போட்டு விட்டும், தோன்றிய பள்ளங்களை சரிசெய்யாமல் கிடப்பில் போட்டிருக்கும் அதிகாரிகளே தீனாவின் மரணத்துக்கு காரணம் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தீனாவின் உடலோடு போரூர்-கிண்டி நெடுஞ்சாலையில் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் சாலை மறியல் செய்தனர்

தகவலறிந்த மாங்காடு போலீசார் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வழக்குப்பதிவு செய்த மாங்காடு போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக தீனாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் டிபி சத்திரம் ராணி அண்ணா நகரில் தண்ணீர் தேவைக்காக போர் போடும் போது சாலையின் மேலேயே பதிக்கப்பட்ட மின்சார வயரில் இரும்பு பாரை பட்டதால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவா மற்றும் பாண்டி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்