Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு ரூ, 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் - முதலமைச்சர்

செப்டம்பர் 16, 2019 01:46

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி சென்னை விருகம்பாக்கத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினார். சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாகவும், இதன்மூலம், சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் 110வது விதியின்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தநிலையில், அதற்கான கணக்கீட்டு பணிகள் வீட்டுக்கு வீடு தொடங்கி விட்டதாகவும், விரைவில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பழனிசாமி, சென்னையில் 15 இடங்களில் பாலங்களை கட்ட இருப்பதாகவும், இதன்மூலம், வெளிநாடுகளில் இருப்பதைவிட சிறப்பான சாலை வசதியை சென்னை பெறும் என்றும் கூறினார். மேலும் சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், பிரமாண்டமான முறையில் சர்வதேச விமானநிலையம் அமைய இருப்பதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.

நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் கோவை என்றும், மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்ற நகரம் சென்னை என்றும் பழனிசாமி தெரிவித்தார். விழா நடைபெறும் இடத்தில் அதிமுக சார்பில் எந்த பேனர்களும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்