Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்: மேலும் 12 சடலங்கள் மீட்பு

செப்டம்பர் 17, 2019 06:03

கோதாவரி:ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்று பகுதியில் படகுகளில் சுற்றுலா போக்குவரத்து நடப்பது வழக்கம். ஆனால், கோதாவரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடுவதால், கடந்த சில நாட்களாக சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா செல்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் அருகே கண்டி பொச்சம்மா கோவிலை சுற்றிப்பார்த்த பொதுமக்கள் சிலர், அங்கிருந்து படகு மூலம் பப்பிகொண்டலு என்ற சுற்றுலா தலத்துக்கு செல்ல விரும்பினர். 

படகுத்துறையில் நின்ற ஆந்திர சுற்றுலா வளர்ச்சி கழக படகில் ஏறினர். 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 62 பேர் அந்த படகில் பயணம் செய்தனர். அவர்களில் சிலர் மட்டும் உயிர் காக்கும் உடை அணிந்து இருந்தனர். பெரும்பாலானவர்கள், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

படகில் சென்று கொண்டிருந்தபோது, கச்சுலுரு என்ற இடம் அருகே திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர். படகு கவிழ்ந்த தகவல் அறிந்தவுடன், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மோட்டார் படகில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 17 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் 13 பேரின் உடல்கள் முதல் நாளிலேயே சடலமாக மீட்கப்பட்டது.  மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் நேற்று விபத்து நடைபெற்ற கோதாவரி ஆற்றுப்பகுதியை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்