Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

செப்டம்பர் 17, 2019 06:40

சென்னை: சவூதி அரேபியாவில் அரசு எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் கிடங்குகளில் தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உற்பத்தியில் 60 சதவீத கச்சா எண்ணெய் தீயில் கருகி நாசமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலுக்குப் பின் நேற்று தொடங்கிய முதல் சந்தையில் கச்சா எண்ணெய்விலை பேரல் ஒன்றுக்கு 60.26 டாலரில் இருந்து 71.57 டாலராக உயர்ந்தது. ஒரே நாளில் ஏற்பட்ட19 சதவீத உயர்வு 1991-ஆம் ஆண்டு வளைகுடா போருக்குப் பின் அதிகபட்ச உயர்வாகும்.

1991-ஆம் ஆண்டு ஈராக் குவைத் மீது படையெடுத்த போது இரு நாடுகளிலும் ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தி இழப்பு மற்றும் 1979 ஈரானில் இஸ்லாமியப் புரட்சியின்போது ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தி இழப்பு ஆகியவற்றை விட சவூதியின் தற்போதைய இழப்பு அதிகம் என சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது 46.6 சதவீதம் ஈராக்கில் இருந்தும் 40.3 சதவீதம் சவூதி அரேபியாவில் இருந்தும் 23.9 சதவீதம் ஈரானில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீதத்துக்கும் அதிக உயர்வு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், விலைவாசியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 

தலைப்புச்செய்திகள்