Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுபஸ்ரீ உயிரிழப்பு: பேனர் வைத்தவர் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு

செப்டம்பர் 17, 2019 12:25

சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், கடந்த 12-ந்தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பியபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை கைது செய்தனர். அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பேனர் அடித்து கொடுத்ததாக கோவிலம்பாக்கத்தில் உள்ள அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதற்கிடையில் நெஞ்சுவலியால் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. உடனே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரித்தனர்.

ஆனால் அதுபோல் அவர் எந்த ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்து சென்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் என்ற வகையில் 308 பிரிவின் கீழ்  பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்