Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப.சிதம்பரம் தொடர்புடைய அனைத்து ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கும் நீதிபதி அஜய்குமார் குகெருக்கு மாற்றம்: டெல்லி உயர் நீதிமன்றம்

செப்டம்பர் 17, 2019 01:10

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு சிறப்பு நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து சிறப்பு நீதிபதி அஜய்குமார் குகெருக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

சிறப்பு நீதிபதி ஓபி சைனி இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து அவர் விசாரித்த வந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி அஜய்குமார்தான் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புடைய வழக்கு, இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புடைய வழக்கு ஆகியவற்றையும் நீதிபதி அஜய்குமார் குகெர்தான் விசாரித்து வருகிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் அஜய்குமார் குகெரிடம் இப்போது ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.

ஆனால், சிறப்பு நீதிமன்ற ஓபி சைனி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் 2ஜி அலைக்கற்றை வழக்கை நாள்தோறும் விசாரித்தார். இந்த வழக்கில் சிபிஐ குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அளிக்காததால் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுவித்தார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனையும் விடுவித்தவர் நீதிபதி ஓபி சைனி.தற்போது ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஜாமீன் வழங்கியதும் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், "புதுடெல்லி, மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதி மற்றும் சிறப்பு நீதிபதியான ஓ.பி.சைனி விசாரித்துவரும் 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிபதி அஜய்குமார் குகெருக்கு 2019, அக்டோபர் 1-ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. இனி அந்த வழக்குகளை அவர் விசாரிப்பார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைப்புச்செய்திகள்