Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை நாடு முழுவதும் ஒருநாள் லாரிகள் வேலை நிறுத்தம்

செப்டம்பர் 18, 2019 12:48

சேலம்: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான அபராத தொகையை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்ததை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது.

இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறும்போது, சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய அபராத தொகை மற்றும் 44 ஏ.இ. வருமானவரி விதியை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், இதனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடக்கிறது என்று தெரிவித்தார்.

நாளை நடக்கும் போராட்டத்தால் இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 390 லாரிகளும் இயங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடையும் என்றும் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்