Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: இளம் பெண் கைது

செப்டம்பர் 19, 2019 03:50

சென்னை: சென்னையில் 50க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் பண மோசடி செய்த வழக்கில், பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரூபன் சக்கரவர்த்தி. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தில்  பதிவு செய்தவர்களின் செல்போன் எண்ணை இணையதளத்தில் ரூபன் எடுத்து, அலுவலகத்தில் வேலை செய்யும் அருணா மூலம் நபர்களையும் தொடர்பு கொண்டு, மலேசியா நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். எங்கள் நிறுவனத்தில் உங்களை தேர்வு செய்துள்ளோம். கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை மற்றும் ஊதியம் வழங்கப்படும் என்றும், உங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்றால் நுங்கம்பாக்கத்தில் உள்ள எங்கள் அலுவலகத்தில் ₹50 ஆயிரம் பணம் செலுத்தி வேலைக்கான உறுதிச் சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

அதை நம்பிய வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் 50 ஆயிரம் செலுத்தினர். பிறகு அனைவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உடல் தகுதி தேர்வு சான்று பெற்று மறுநாளே மலேசிய நிறுவன வேலைக்கான சான்றிதழ்களை வாங்கியுள்ளனர். சான்றிதழ்களை வழங்கும் போது, நிறுவனத்தை நடத்தி வந்த ரூபன் சக்கரவர்த்தி மற்றும் அருணா ஆகியோர் ஒரு மாதத்தில் மலேசியா நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கான விசா வழங்கப்படும் என்று தெரிவித்து அனுப்பியுள்ளனர். அதன்படி பணம் கட்டிய பட்டதாரிகள் 20 நாட்களுக்கு பிறகும் எந்த செல்போன் அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அப்போது அந்த நிறுவனம் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ரூபன் சக்கரவர்த்தி மற்றும் தொடர்பு கொண்டு பேசிய அருணாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, செல்போன் எண் மூலம்  பேசிய ஆவடியை சேர்ந்த அருணா என்ற இளம் பெண்ணை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ரூபன் சக்கரவர்த்தி மற்றும் வேலைக்கு ஆட்களை பிடித்து கொடுத்த இடைத்தரகர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்